தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் சுயதொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
சர்வதேச தொழில் முனைவோர் வார விழாவின் ஆறாம் நாளை ஒட்டி இணைய வாயிலாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல தொழில் முனைவோர் தங்களது தயாரிப்பு மற்றும் சேவைகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
தமிழ் வர்த்தக சங்ககத்தின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சிறு சுயதொழில் முனைவோருக்கு இந்நிகழ்ச்சியில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபட விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களும், அரசு சார்பில் அதற்காக உள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ் வர்த்தக சங்கம் முழுக்க முழுக்க தொழில் முனைவோருக்காக செயல்பட்டு வருகிறது. சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதனை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஆர்.கே. சண்முகம் செட்டி, சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்தவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் நோக்கில் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது
அன்றிலிருந்து இன்று வரை தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு, பல்வேறு வணிக சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான தோற்றச் சான்றிதழ்கள் வழங்குதல், வணிக ஊக்குவிப்பிற்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவோருக்கு உதவுதல், வரி விதிப்பு, முக்கிய சட்டத்திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.