உத்தரகாண்டின் பித்தோராகரில் 133 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
பிராந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாம், உத்தரகாண்டின் பித்தோராகரில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. அண்மையில் பீகார் மாநிலம் தானாபூரில் நடைபெற இருந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உத்தரபிரதேசத்தில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் பித்தோராகருக்கு வரத் தொடங்கினர்.
அவர்களுக்கு போதிய தங்குமிடம் இல்லததால் சாலைகளிலும், நடைபாதைகளிலும் இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், பிற ஊர்களில் இருந்து பித்தோராகருக்குச் செல்ல வாடகை வாகனங்கள் ரூ.10,000 வரை கட்டணம் வசூலித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாவட்ட நிர்வாகம், ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்கள் தங்குவதற்காக 30 பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கான உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.