பிரிட்டனில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவினால் அங்கு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவு அடுத்த வாரம் வரை தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது. சுமார் 3 செமீ பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிரேட்டர் மான்செஸ்டர், பிரினிங்டன் ஹில், ஓட்டர்ஸ்பூல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் நாளை பனிப்புயல் வீச வாய்ப்புள்ளதால், லங்காஷயர், வடக்கு யார்க்ஷயர், கும்ப்ரியா உட்பட இங்கிலாந்தின் வடபகுதியில் பயண தாமதங்கள், மின்வெட்டு உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெர்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், இந்த ஆண்டின் 2-வது பனிப்புயலாகும்.
பொதுமக்கள் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும், அத்தியாவசியமான பயணங்களை மட்டும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.