18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்களுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடிகளான மவோரி மக்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, போர் நிறுத்தத்திற்காக உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது.
பிரிட்டன் அரசுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடி மக்களான மவோரி மக்களுக்கும் இடையே 184 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்த உடன்படிக்கையில் சில திருத்தங்களை கொண்டுவர ஆளும்கட்சி அண்மையில் மசோதா இயற்றியது. இதற்கு அவையில் எதிர்ப்பு தெரிவித்த மவோரி இன எம்.பி. ஹானா ரவ்ஹிதி தங்களது பாரம்பரிய நடனமான ஹக்காவை அரங்கேற்றியதுடன் மசோதா நகலை கிழித்தெறிந்தார்.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மவோரி இன மக்கள், வெலிங்டன் நகரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பாரம்பரிய முறைப்படி இறகுகள் மற்றும் தழைகளால் ஆன உடைகளை அணிந்தபடி அவர்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடியபடி சென்றனர்.
இது தங்களது உரிமையை பறிக்கும் முயற்சி என மவோரி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்றாலும், அதன் அறிமுகம் நியூசிலாந்தின் பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.