வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் 2% உயர்வுடன் முடிவடைந்துள்ளன.
அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்திய லஞ்சப்புகாரால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன. இன்று காலை உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 2.39% உயர்வுடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 557.35 புள்ளிகள் உயர்ந்தது. இது கடந்த ஐந்து மாதங்களில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயர்வாகும். நேற்று சுமார் 20 சதவீதம் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள் இன்று 2% அளவுக்கு உயர்ந்தன.
இருப்பினும் இன்னும் சந்தையில் ஏற்ற, இறக்கம் தொடர்வதாகவும், சந்தை முழுமையாக மீண்டுள்ளதாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் aநிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி உட்பட பல்வேறு சந்தைகள் ஏற்றம் கண்டன. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன.
மேலும், மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே சந்தையின் நிலை குறித்து தெளிவான முடிவு கிடைக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.