உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு நீதிமன்றம் லஞ்சப்புகார் சுமத்தியுள்ள நிலையில், இந்த புகார்களை அதானி குழுமம் மறுத்துள்ளது.
கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் 6 பேர் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2020 முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.2,029 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுத்ததாக நியூயார்க் கிழக்கு நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளனது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் ஆகியோர் மீது அமெரிக்காவில் கைது வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதானி குழுமம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அஸூர் பவர் நிறுவனம் தொடர்புடைய எரிசக்தி திட்டங்களில் இருந்து $2 பில்லியன் லாபம் ஈட்டும் நோக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் நியூயார்க் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. சோலார் ஒப்பந்தத்துக்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி நிதி பெற்றுள்ளதாகவும் நியூயார்க் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தகவல் வெளியானதும் அதானி குழும பங்குகள் சுமார் 20 சதவீத சரிவை சந்தித்தன. அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் ரூ.2 லட்சம் கோடி சரிந்தது. சந்தை தரவுகளின்படி தற்போது அதானி குழுமத்தின் 11 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.12.3 லட்சம் கோடியாக உள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது .
இந்தக் குற்றச்சாட்டு குறித்து டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டின் மூலமாக இந்திய மற்றும் அமெரிக்க சட்டத்தை அதானி மீறியுள்ளது அம்பலமாகியுள்ளதாகவும், அவர் இன்றே கைது செய்யப்பட்ட வேண்டும் என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
அதேபோல் அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த $700 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். மேலும், கென்யாவிலுள்ள விமான நிலையங்கள் விரிவாக்கத்திற்காக அதானி நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.