சென்னை- பெங்களூரு இடையேயான ரயில் பயண நேரம் மேலும் ஒரு மணி நேரம் குறையவுள்ளது.
சென்னை – பெங்களூரு இடையேயான ரயில் வழித்தடத்தை ஒரு முக்கியமான அதிவேக பாதையாக மாற்ற இரு மாநிலங்களும் உறுதியாக இருப்பதால், வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4.30 மணி நேரத்திலிருந்து மூன்று மணிநேரம் மற்றும் முப்பத்தைந்து நிமிடங்களாக குறையவுள்ளது. அதே நேரத்தில் சதாப்தியின் பயண நேரம் இருபது நிமிடங்களுக்கு மேல் குறையவுள்ளது.
இதனை முன்னிட்டு, ஜோலார்பேட்டை-பெங்களூரு இடையேயான பயணத்தை விரைவுபடுத்தவும், அந்த வழியாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ரயில், 9.28 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடைந்தது.
பெங்களூரு-சென்னையின் பாதை மக்களுக்கு மட்டுமல்ல, வணிகத்திற்கும் முக்கியமானது. ஏனெனில் இது பொருளாதாரம், தொழில்நுட்பம், உற்பத்தி மையங்களையும் இணைக்கிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதன் சோதனைகளின் போது அதிகபட்சமாக மணிக்கு 183 கிமீ வேகத்தை பதிவு செய்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. வேக மேம்பாடுகளை முழுமையாகச் செயல்படுத்திய பிறகு, இந்த வேக அதிகரிப்பு விரைவில் அமலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.