பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஒரு தனிநபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கவும் இணைக்கவும் வருமான வரித்துறை பான் எண்ணைப் பயன்படுத்துகிறது. இதில் வரி செலுத்துதல், TDS/TCS கிரெடிட்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும். பான் என்பது ஒரு நபரை வருமான வரித்துறையுடன் இணைக்கும்போது, அவரது அடையாளமாக செயல்படுகிறது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், PAN 2.0 திட்டமானது வரி செலுத்துவோரின் பதிவு சேவைகளை எளிதானதாகவும், விரைவாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். தரவு பாதுகாப்பு, எளிய செயல்முறைகள், குறைந்த செலவு, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
இத்திட்டம் PAN சேவைகளை விரைவாக வழங்குவதோடு, PAN சரிபார்த்தலையும் விரைவாக மேற்கொள்ளுமென அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இத்திட்டத்தின்படி, PAN அட்டையில் க்யூ ஆர் குறியீடு இணைக்கப்படவுள்ளது. ஆனால் இதற்காக புதிய அட்டை வாங்கத்தேவையில்லை எனவும், க்யூ ஆர் குறியீட்டைச் சேர்ப்பது உட்பட அனைத்து மேம்படுத்தல்களும் கட்டணமின்றி வழங்கப்படும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
விவசாயம், கல்வி, எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.