கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் கூறியதைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதே கருத்தை முன் மொழிந்துள்ளார்.
எஸ்பிஐ-யின் 11-வது வங்கிகள் மற்றும் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில் வளர்ச்சி குறித்து நாம் ஆலோசிக்கும்போது வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகளை நிராகரித்த அவர், சர்வதேச நிலவரங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார்.
இந்தியாவின் பொருளாதாரம் வலிமையுடன் இருப்பதாக கூறிய அவர், உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான உறுதியுடன் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.