கௌதம் அதானியின் நிறுவனங்களில் ஒன்றான அம்புஜா சிமெண்ட்ஸ், ஓரியண்ட் சிமெண்ட் லிமிடெட் (OCL) நிறுவனத்தை ரூ.8,100 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின், அம்புஜா சிமெண்ட்ஸ், ஓரியண்ட் சிமெண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் பங்குச் சந்தையில் உயர்வை சந்தித்தன. அம்புஜா சிமெண்ட்ஸின் பங்குகள் 1.49% உயர்ந்தன. ஓரியண்ட் சிமெண்ட்ஸின் பங்குகள் 1.65% லாபம் அடைந்தன.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, SAST விதிமுறைகளுக்கு இணங்க, ஓரியண்ட் சிமெண்ட்டில் ஒரு பங்கிற்கு ₹395.40 என்ற விலையில் கூடுதலாக 26% பங்குகளை அம்புஜா சிமெண்ட்ஸ் வாங்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கையகப்படுத்தலின் மூலம் அல்ட்ரா டெக் நிறுவனத்திற்கு அடுத்ததாக, நாட்டின் 2-வது பெரிய சிமெண்ட் நிறுவனமாக அம்புஜா சிமெண்ட்ஸ் உருவெடுத்துள்ளது.
இந்த கையகப்படுத்தலின் மூலம் 2028-ம் ஆண்டுக்குள் 140 MTPA என்ற இலக்கை நோக்கி செல்ல உதவும் என அம்புஜா நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் அதானி சிமெண்ட்டின் இந்திய சந்தைப் பங்கை 2% உயர்த்தும். கடந்த 2022-ம் ஆண்டில் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி, 2023 ஆம் ஆண்டில் சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தொடர்ந்து, தற்போது ஓரியண்ட் சிமெண்ட்ஸும் அதானி குழுமத்தில் இணைந்துள்ளது.