கேரளாவின் கண்ணூரில் அமைந்துள்ள ஆறளம் வனவிலங்கு பாதுகாப்பு மையம், இப்போது அதிகாரப்பூர்வமாக பட்டாம்பூச்சி சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற மாநில வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பட்டாம்பூச்சி சரணாலயமாகும். 55 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பகுதியில் தற்போது வரை 266 வகையான பட்டாம்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சில நிழல்கதிர் பட்டாம்பூச்சிகள் மிகவும் அரியவையாகவும், பாதுகாக்க வேண்டியவையாகவும் உள்ளன.
சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி மையமாக மாறும் ஆறளம்:
பட்டாம்பூச்சி வாழ்விடங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஆறளம் சரணாலயம் சுற்றுலா வளர்ச்சிக்கும், கல்வி மற்றும் உயிரியல் ஆராய்ச்சிக்கும் முக்கிய மையமாக உருவாக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் அதிகமான பட்டாம்பூச்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் காணப்படுவதால், இது பசுமை சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாநில சுற்றுச்சூழல் மற்றும் கல்வித்துறைகளுடன் இணைந்து, இந்த புதிய சரணாலயம் பல்லுயிர் பாதுகாப்பிலும், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
பிரியதர்ஷினி .ஆ