கூகுள் நிறுவனம் விதிகளை மீறியதாக ஆன்லைன் கேமிங் நிறுவனமான வின்சோ அளித்த புகாரைத் தொடர்ந்து, கூகுள் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) உத்தரவிட்டது.
கூகுள் தனது ஆதிக்க நிலையையும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாட்டு கொள்கைகளையும் தவறாக பயன்படுத்தியதாக வின்சோ கூகுள் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும்,ப்ளே ஸ்டாரில் செயலிகளை இடம்பெற செய்ய நியாயமற்ற கட்டுப்பாடுகளை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் தங்களது வின்சோ செயலியை தங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த செயலியை பதிவிறக்குவதற்கு பயனர்கள் இணையதளத்தை அணுகும்போது, எச்சரிக்கை செய்தி காட்டப்படுவதாகவும் வின்சோ தெரிவித்துள்ளது.
இது இந்திய போட்டி சட்டத்தின் பிரிவுகள் 4(2)(a)(i), 4(2)(b)ஐ கூகுள் மீறியதற்கான முகாந்திரம் உள்ளதாகவும், வணிக இழப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிசிஐ தலைமை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.