2025 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரியில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது.
2024 பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பில் வரி செலுத்துவோருக்கு நிலைக்கழிவு எனப்படும் ஸ்டான்டர்டு டிடக்சனை 50,000-ல் இருந்து 75,000-ஆக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திருத்தப்பட்ட வரி ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும். இது சம்பளம் பெறும் ஊழியர்கள் ரூ.17,500 வரை வருமான வரியைச் சேமிக்க அனுமதிக்கும். எனினும், மூத்த குடிமக்கள் இந்த நிவாரணத்தில் சேர்க்கப்படவில்லை.
மூத்த குடிமக்களுக்கான வரிச் சலுகைகள் குறித்து மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈட்டால ராஜேந்தர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.7.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கவும், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை 5 சதவீத வருமான வரி விதிக்கவும் அரசு முன்மொழிகிறதா? என்றும், மூத்த குடிமக்களுக்கான தேசிய சேமிப்புச் சான்றிதழ் முதலீட்டுக்கான வரி விலக்கு இந்த நிதியாண்டு முதல் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக மாற்றியமைக்கப்படுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, வருடாந்திர பட்ஜெட் செயல்முறையின் ஒரு பகுதியாக, வருமான வரிச் சட்டம், 1961-ல் பல்வேறு திருத்தங்களை
பரிசீலித்து வருவதாகவும், தற்போது எந்த திட்டத்தையும் உடனடியாக அமல்படுத்த திட்டமில்லை என்றும் குறிப்பிட்டார்.