இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். பெரும்பாலான மோசடிகள் தொலைபேசி வாயிலாகவே நடைபெறுகின்றன. இந்த மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், விஐ, ஜியோ, பிஎஸ்என்எல் அனைத்திற்கும் புதிய விதிமுறை மற்றும் நிபந்தனைகளை கட்டாயமாக்கியது.
அதனை தடுக்கும் விதமாக மெசேஜ் ட்ரேசிபிலிட்டி என்ற புதிய விதிமுறையை TRAI அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நிதி நிறுவனங்கள், வங்கிகள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் என எந்த நிறுவனமாக இருந்தாலும், ஓடிபியை அனுப்புவதற்கு முன்னர், அதன் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும். இந்த விதியின் மூலம் மோசடி நடவடிக்கைகளை தடுக்க முடியும் என TRAI நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறையை செயல்படுத்த முதலில் அக்டோபர் 31-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோரியதை அடுத்து இது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, இந்த நடைமுறை டிசம்பர்.1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையால் இனி மக்களுக்கான ஒவ்வொரு ஓடிபி தாமதாக வரும் என பல்வேறு செய்திகள் வெளியாகின. இந்த தகவல் உண்மைதானா என்பது என்பது குறித்து TRAI விளக்கமளித்துள்ளது. அதன்படி, மக்களுக்கு வரும் குறுஞ்செய்திகளின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ளவே இந்த விதிமுறை என்றும், இதனால் மக்களுக்கு OTP வருவதில் தாமதம் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.