விமான நிறுவனமான இண்டிகோ அக்டோபர் மாதத்தில் 86.4 லட்சம் பயணிகளுடன் மொத்த பயணத்தில் 63%-ஐ கொண்டுள்ளது .
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் 86.4 லட்சம் பயணிகளுடன் இண்டிகோ நிறுவனம், 63.3% பயணங்களை கொண்டுள்ளது. இண்டிகோவைத் தொடர்ந்து ஏர் இந்தியா குழுமம் 26.48 லட்சம் பயணிகளுடன் 19.4% சந்தைப் பங்கை கொண்டுள்ளது. விஸ்தாரா நிறுவனம் 9.1% பங்குகளுடன் 12.43 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றது.
ஸ்பைஸ்ஜெட் 2.4% பங்குடன் 3.35 லட்சம் பயணிகளை ஏற்றிச்சென்றதாகவும், ஆகாசா ஏர் 4.5% பங்குடன் 6.16 லட்சம் பபணிகளை ஏற்றிச்சென்றது.
திட்டமிட்ட நேரத்தில் விமானங்களை இயக்கியதிலும் இண்டிகோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனம் 71.9% சரியான நேரத்தில் விமானங்களை இயக்கியுள்ளது. விஸ்தாரா விமான நிறுவனம் 71.4% உடன் 2-வது இடத்திலும், ஆகாசா ஏர் 67.2% உடன் 3-வது இடத்திலும் உள்ளது.
டிஜிசிஏ தரவின்படி ஓராண்டில் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து 5% அதிகரித்துள்ளது. 2024 ஜனவரி-அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 13.21 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை 12.54 கோடியாக இருந்தது.