நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் வாகன ஏற்றுமதி 30 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக, இந்தியாவில் இந்த மைல்கல்லை எட்டிய ஒரே நிறுவனம் மாருதி சுசுகி ஆகும்.
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 1986-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. செப்டம்பர் 1987-ல் ஒரே தவணையில் 500 கார்கள் ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டன. 2013-ம் நிதியாண்டில் சுசுகியின் வாகன ஏற்றுமதி 10 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியது. அதனை தொடர்ந்து, 2021-ம் நிதியாண்டில் அடுத்த 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் என்ற இலக்கை எட்ட வெறும் 3 ஆண்டுகளே தேவைப்பட்டுள்ளது.
குஜராத்தின் பிபாவாவ் துறைமுகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்ட 1,053 கார்களில் 30-வது லட்சம் கார் இடம் பெற்றிருந்தது. செலிரியோ, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி, பலேனோ, சியாஸ், டிசையர் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற மாடல் கார்கள் இம்முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த சாதனை இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டு என மாருதி சுசுகியின் தலைமை செயல் அதிகாரி ஹிசாஷி டேகுச்சி கூறினார்.இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பயணிகள் வாகனங்களில் 40% வாகனங்கள் சுசுகி நிறுவனத்துடையது என்றும் அவர் கூறியுள்ளார்.