தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ. ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ நோக்கி வாடிக்கையாளர்கள் திரும்பியுள்ளனர்.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இதில் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 79.69 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 14.34 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 15.53 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.
அதே சமயம், செப்டம்பர் மாதத்தில் 8.49 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-லில் இணைந்துள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் இது கடந்த மாதங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவாகும். முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்களும், ஜூலையில் 29 லட்சம் வாடிக்கையாளர்களும் பிஎஸ்என்எல்-லில் இணைந்தனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. தற்போது, மொபைல் பயனர் சந்தையில் ஜியோ 40.2% பங்குகளுடன் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் 33.24% பயனர்களையும் , வோடபோன் ஐடியா 18.4% பயனர்களையும், BSNL 7.98% பயனர்களையும் கொண்டுள்ளது.
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ. ஏர்டெல், விஐ ஆகியவை கட்டணங்களை 10ல் இருந்து 27சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியதே வாடிக்கையாளர்கள் இழப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.