மின்சார வாகனங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு உலக வங்கியின் உதவியை நாடவுள்ளது. இது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகள் நாளை தமிழகம் வரவுள்ளனர்.
ஆட்டோமொபைல் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதால் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. தற்போது மின்சார வாகன உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது. தற்போது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சார இரு சக்கர வாகனங்களில், 70 சதவீதம் வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியில் முதல் ஐந்து உற்பத்தியாளர்களில், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஏதர் எனர்ஜி ஆகியவற்றின் உற்பத்தி ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. நாளை தமிழகம் வரவுள்ள உலக வங்கி அதிகாரிகள், டான்ஜெட்கோ உட்பட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர். தமிழ்நாட்டின் எந்தவொரு திட்டத்திற்கும் உலக வங்கி நிதியளிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கார்பன் உமிழ்வை குறைக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கும் உலக வங்கியின் நோக்கத்தின் ஒரு படியாக இந்த பயணம் அமையலாம் என கருதப்படுகிறது.
சென்னை மட்டுமின்றி கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் ஆகிய நகரங்களையும் மின்சார வாகன உற்பத்தி மையங்களாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.