பிற சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை தேசிய பங்குச்சந்தை(NSE)யில் நேரடியாக பட்டியலிடுவதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
பிற சந்தைகளில் இருந்து பட்டியலிடப்படவுள்ள நிறுவனங்களின் குறைந்தபட்ச நிகர மதிப்பை ரூ.10 கோடியிலிருந்து ரூ.75 கோடியாக தேசிய பங்குச்சந்தை உயர்த்தியுள்ளது. இல்லையெனில், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனம் வைத்திருக்க வேண்டும்
அதேபோல், ஒரு நிறுவனம் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்றும் என்எஸ்இ கூறியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரஉள்ளன. குறைந்தபட்ச நிகர மதிப்பு தேவை, குறைந்தபட்ச பொது பங்குதாரர்களின் எண்ணிக்கை தொடர்பான விதிமுறைகளையும் தேசிய பங்குச்சந்தை மாற்றியமைத்துள்ளது.
அதேபோல், செலுத்தப்பட்ட மூலதனத்திற்கான விதிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்திற்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் இருக்க வேண்டும்.ஆனால், இப்போது, ஒரு நிறுவனம் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யும் போது, குறைந்தபட்சம் ரூ.10 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் வைத்திருந்தால் போதுமானது.
பிற சந்தைகளில் பட்டியலிடப்பட்ட வரலாறு குறித்த விதி மாறாமல் 3 ஆண்டுகளாகவே உள்ளது. மேலும், விண்ணப்பிக்கும் தேதியில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச பொது பங்குதாரர்களின் எண்ணிக்கை 500-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தப்ப்ட்டுள்ளது.