அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2 தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 900 ரூபாய் அதிகரித்துள்ளது.
பொதுவாகவே தங்கத்தின் விலையை, சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளே இணைந்து தீர்மானிக்கின்றன. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சந்தை நிலவரம் வலுவாக இருக்கும்போது தங்கத்தின் விலை குறையும். உலக சந்தைகள் நிலையாக இருந்தால் தங்கத்தின் தேவை மற்றும் அதன் விளைவாக, அதன் விலை குறைகிறது. ஏனெனில் பணவீக்கம் அதிகரிக்கும்போதும், சந்தை நிலவரம் நிலையற்றதாகவும் இருக்கும்போதும் முதலீட்டாளர்கள் தங்கத்தை தேடுவது கணிசமாக அதிகரிக்கும்.
அதேபோல் அமெரிக்க டாலரின் மதிப்பும் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், உள்நாட்டு தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கும்போது, தங்கத்தின் விலை குறைகிறது.
இப்போது தங்கம் வாங்க சரியான நேரமா ?
இந்திய சந்தையை பொறுத்த வரை தற்போது திருமண சீசன் என்பதால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு நகை வியாபாரிகள் சலுகைகளை அறிவிக்க வாய்ப்புள்ளதால் தங்கம் வாங்க இது சிறந்த நேரம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள், அமெரிக்க வட்டி விகிதக் கொள்கைகள், புவிசார் அரசியல்
நிலவரத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக புவிசார் அரசியலில் அசாதாரமான சூழல் நிலவுவதால், தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் தொடரும் என நிபுணர்கள் கூறியுள்ளனர் .