ஐபிஎல்-லில் டெல்லி அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ரிஷப் பண்ட் மனம் திறந்துள்ளார்.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் 24, 25 ஆகிய இரு நாட்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகிய ரிஷப் பண்ட், தன்னை அந்த அணி தக்கவைக்காததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தான் ஏலத்தில் பங்கேற்க பணம் ஒரு காரணம் அல்ல என்றும் கூறியுள்ளார். ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரிஷப் பண்ட் டெல்லி அணியை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று கூறினார்.
ஆனால் சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு ரிஷப் பண்ட் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். தான் அணியை விட்டு விலகியது பணத்தின் காரணமாக அல்ல என்பதை தன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று ரிஷப் பண்ட்கூறியுள்ளார். ரிஷப் பண்டை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.