இணைய விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் மீதான விசாரணைக்கு எதிரான மனுக்களை விசாரிக்குமாறு, இந்திய போட்டி ஆணையமான(சிசிஐ) உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தங்கள் இணையதளங்களில் குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கு ஆதரவாக, இந்திய சட்டங்களை மீறியதாக இந்திய போட்டி ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. குறிப்பாக, சாம்சங் மற்றும் விவோ போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை ஆன்லைனில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்த சட்டங்களை மீறி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இதனை எதிர்த்து அந்நிறுவனங்கள் சார்பில் ஐந்து உயர் நீதிமன்றங்கள் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையை சீர்குலைக்கவே பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய போட்டி ஆணையம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. விசாரணையை விரைவாக முடிக்க, அதற்கு தடையாக உள்ள மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டுமெனவும் இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.