விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய விவசாயப் பொருளாதார நிபுணர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மதா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பை அறிவிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.
இந்தியா முழுவதும் உள்ள விவசாயச் சந்தைகளில் ஒரே மாதிரியான வரிவிதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிறுவன இணையதளங்களில் விவசாய இயந்திரங்களின் விலைகள் காட்டப்பட வேண்டும், மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், அவசர காலங்களில் மட்டுமே குறைந்தபட்ச ஏற்றுமதி விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
மேலும், பூச்சிக்கொல்லிகளின் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனவும், போலி பூச்சிக்கொல்லிகளின் விற்பனையைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.