வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6.5% ஆக தொடருமென தெரிவித்தார். தொடர்ந்து 11-வது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. கடைசியாக 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதங்களை 6.5% ஆக உயர்த்தியது
உயர் பணவீக்கம் மற்றும் ஜிடிபி சரிவுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளதாக சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார். வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் பணவீக்கம் 4% என்ற அளவில் இருப்பதில் கவனம் செலுத்தவும் நிதிக் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நிலையான மற்றும் சீரான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மாறாது.