ஆசியாவில் மிகச்சிறந்த நாணயங்களில் இந்தியா ரூபாயும் இடம் பெற்றுள்ளதாக மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி, சர்வதேச சவால்களுக்கு இடையிலும் ஆசிய அளவில் சிறந்த நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாய் உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆசிய அளவில் ரூபாயின் செயல்பாடு வலிமையாக இருப்பது இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படையை காட்டுவதாகவும் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 19 நிலவரப்படி 1.4 சதவீதம் சரிவை சந்தித்தது. அதேசமயம், ஜப்பானின் யென் 8.8 சதவீதமும், தென் கொரியாவின் வோன் 7.5 சதவீதமும் சரிவடைந்துள்ளன. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் வலுவாக உள்ளதாகவும், இது இந்தியாவின் நிலையான பொருளாதாரத்திற்கு சான்றாக அமைந்துள்ளதாகவும், பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அதேபோல், பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எந்த யோசனையும் இல்லை எனவும் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.