இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ.850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கடினமான உணவு முறையை பின்பற்றி 40 நாட்களுக்குள் 4-ம் நிலை புற்றுநோயை சரி செய்ததாக அவர் கூறியிருந்தார். வெறும் 40 நாள்கள்தான் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறிய நிலையிலும், எலுமிச்சை, மஞ்சள் போன்ற சிகிச்சை எடுத்து புற்றுநோயிலிருந்து மெல்ல விடுபட்டு வருவதாக அவர் கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
நவ்ஜோத் சிங் சித்து கூறியது உண்மைக்கு முரணான தகவல் என்று சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி சார்பில் அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபோன்ற தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும், சிகிச்சையைத் தொடராமல் இதுபோன்ற முறைகளில் செலவிட்டு ஆபத்தாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இன்னும் ஒரு வார காலத்திற்குள் நவ்ஜோத் கௌர் சித்து கூறிய கூற்றுக்கு சரியான ஆதாரங்களை காட்டத் தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவற்றுக்கு பதில் அளிக்காத பட்சத்தில் ரூ. 850 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.