வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக பிற்பகலில் புயலாக மாறியது. இந்த புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது. நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது அதி கனமழை மற்றும் 50 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில், குடியரசு தலைவர் திரெளவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக பேரிடர் மேலாண்மை திரைத்துறை சார்பில், பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் மற்றும் கடற்கரைப்பகுதிகள் மூடப்படுகிறது.