நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் இடையேயான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி உற்பத்தி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.7 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 8.1 சதவீதமாகவும் இருந்தது.
2025-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் உற்பத்தி துறையின் வளர்ச்சி 2.2 சதவீதமாகவும், சுரங்கம் மற்றும் குவாரி துறையின் வளர்ச்சி -0.1 சதவீதமாகவும் உள்ளது. எனினும், ஒட்டுமொத்தமாக முதலாவது அரையாண்டில் 6.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் 2-ம் காலாண்டில் 3.5 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதேபோல், வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள், 2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இது கடந்த ஆண்டில் 4.5 சதவீதமாக இருந்தது.
தனியார் இறுதி நுகர்வு செலவு 2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் 6 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது .