புல்லட் ரயில்கள், சிக்னலிங் சிஸ்டம் போன்ற நவீன ரயில்வே தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா தயாராகி வருவதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புல்லட் ரயில் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னேற்றம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து 320 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்கட்டமைப்பு பணிகள் தயாராக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலின் அனுபவத்தை கொண்டு எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் புல்லட் ரயில் திட்டங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், ரயில்வே பாதுகாப்பு தொழில்நுட்பமான கவாச் 5.0 அமைப்பையும் உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 280 கிலோ மீட்டர் வேகத்திலும், சராசரியாக 250 கிமீ வேகத்திலும் செல்லும் வகையில் புல்லட் ரயில்களை உருவாக்க இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.