தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டை க்யூ ஆர் கோடு வசதி உடன் மேம்படுத்துவதற்காக ரூ.1,435 கோடி மதிப்பிலான 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு தனிநபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும், கண்காணிக்கவும் இணைக்கவும் வருமான வரித்துறை பான் எண்ணைப் பயன்படுத்துகிறது. இதில் உள்ள 10 இலக்க எண் அடையாள எண்ணாக செயல்படுகிறது. தற்போது, ரூ.1,435 கோடி மதிப்பில் பான் அட்டைகளை க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பான் 2.0 இன் அம்சங்கள் என்ன?
பான் அட்டைகள் க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டம் மூலம் தற்போது பான் அட்டை வைத்துள்ள 78 கோடி பேர், தங்கள் பான் அட்டைகளை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இதில், பான் எண் மாறாது. பான் அட்டை மட்டும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தரவு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும்.
இதே போல், தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பான் அட்டை வர்த்தகத்துக்கான பொது அடையாள அட்டையாக மாறும். இதில் அனைத்து பான்/டான்/டின் எண்கள் ஒன்றிணைக்கப்படும்.
இதேபோல், கட்டாய பான் தரவு பெட்டக அமைப்புடன் ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும் எனவும், இந்த வசதியை பான் தரவைப் பயன்படுத்தும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள மென்பொருள் கிட்டத்தட்ட 15-20 ஆண்டுகள் பழமையானது என்பதால், ஒருங்கிணைந்த ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். பான் 2.0 அட்டையை பெறுவதற்கான விவரங்கள் வருமானவரித்துறை இனிமேல் வெளியிடும்.