வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என பெயரிடப்படும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இது நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், இதனால் அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
இதையடுத்து, அப்பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க நடவடிக்கை அவசியம், நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதே போன்று, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.