2023 ஆண்டில் உலகம் முழுவதிலும் நாளொன்றுக்கு 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது துணைவராலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில்
பெரும்பாலும் குடும்பத்தினராகவோ, தெரிந்தவராகவோ உள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, ஐநாவின் பெண்கள் மற்றும் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அதன்படி, சர்வதேச அளவில் 2023-ம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு குடும்ப உறுப்பினர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக ஆபத்தான இடம் அவர்களது வீடுதான் என்று ஐநா அறிக்கை கூறியுள்ளது. இந்த வன்முறைகளில் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 21,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.