ஆன்லைன் வர்த்தக தளமான மிந்த்ரா, ப்ளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்று விரைவு வர்த்தகத்துறையில் கால் பாதிக்கவுள்ளது.
இந்தியாவில் விரைவு வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் துறைகளில் ஒன்றாகும். விரைவு வர்த்தகம் என்பது நுகர்வோர் விரும்பும் பொருட்களை செய்த ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படுவதாகும். மளிகை பொருட்கள் இந்த முறையில் பெரும்பாலும் டெலிவரி செய்யப்படுகின்றன.
2026-ம் ஆண்டில் உணவு விநியோகத்தின் சந்தை மதிப்பை, விரைவு வர்த்தகத்தின் சந்தை மதிப்பு முந்தி விடும் என மார்கன் ஸ்டான்லி அறிக்கை கூறியுள்ளது. மோதிலால் ஓஸ்வால் தரவுகளின் படி, இந்தியாவில் விரைவு வர்த்தகத்தில் சொமேட்டோவின் பிளிங்கிட் 46% பங்குகளுடன் சந்தையில் முன்னணியில் உள்ளது. செப்டோ 29% பங்குகளையும், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் 24% பங்குகளையும் வகிக்கிறது.
ஃப்ளிப்கார்ட், அமேசான், டாடாவின் பிக் பேஸ்கெட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் விரைவு வர்த்தகத்தில் நுழைந்துள்ள நிலையில் தற்போது மிந்த்ரா நிறுவனமும் விரைவு வர்த்தகத்தில் கால் பாதிக்கிறது. பிளிப்கார்ட்டின் விரைவு சேவையான மினிட்ஸ் இந்த ஆண்டு பண்டிகைக் கால விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பாகத் தொடங்கியது. அமேசானும் தனது சேவைகளை விரைவில் தொடங்கவுள்ளது.
‘எம்-நவ்’ என பெயரிடப்பட்டுள்ள மிந்த்ராவின் விரைவு வர்த்தக சேவை, சோதனை முயற்சியாக பெங்களூருவின் சில பகுதிகளில் மட்டும் தொடங்கப்படவுள்ளது. படிப்படியாக நகரின் பிற பகுதிகளுக்கும், அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமென மிந்த்ரா நிறுவனம் கூறியுள்ளது.