இலங்கை, வங்கதேசம், ஜப்பான், சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள், மதுபானங்கள் மற்றும் சுஷி ஆகியவற்றின் இறக்குமதிக்கு இந்தியா இந்த ஆண்டு தடை விதித்துள்ளது. ஏனெனில் அவை நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட குறைவாக இருந்தன.
இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் (FSSAI) அண்மையில் உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கை (FIRA) தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தளத்தில், எந்தெந்த நாடுகளில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது வெளியிடப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (இறக்குமதி) ஒழுங்குமுறை, 2017 இன் விதிமுறை 11(7), உணவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது
FIRA தளத்தின் தகவலின் படி, FSSAI இலங்கையில் இருந்து இலவங்கப்பட்டை பூ மொட்டுகளை மே 24 அன்று பெங்களூரில் நிராகரித்தது. பல்வேறு குறைபாடுகள் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஏப்ரல் 22 அன்று இலங்கை பருப்புகள் நிராகரிக்கப்பட்டன. மூலப்பொருட்களின் விபரங்கள் குறிப்பிடப்படாததால் ஜப்பானின் தேநீர் தூளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிஹெச் மதிப்பு அதிகமாக இருந்ததால் சீனாவின் மதுபானம் நிராகரிக்கப்பட்டது. சீனாவின் சுஷி நோரி என்ற கடற்பாசியும் உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் இருப்பதால் டெல்லி துறைமுகத்தில் மே மாதம் நிராகரிக்கப்பட்டது. இதேபோல், துருக்கி ஆப்பிள்கள், வங்கதேச வெற்றிலைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.