இந்தியாவின் ஜவுளித்துறையில் அடுத்த சில ஆண்டுகளில் எழுச்சி ஏற்படுமென நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
சர்வதேச அளவில் ஜவுளி வர்த்தகத் துறையின் அளவு $800 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு மட்டும் சுமார் $35 பில்லியன் ஆகும். சமீபத்தில், மத்திய அரசு 2030-ம் ஆண்டிற்குள் $100 பில்லியன் டாலர்களை எட்டுவதற்கான இலக்கை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 200,000 கோடி ரூபாய் முதலீடுகள் மட்டுமின்றி 30 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம், கொரோனா போன்றவற்றின் காரணமாக இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதி தேக்கமடைந்தது. புவிசார் அரசியல் நிலவரம் மற்றும் அதிக உற்பத்தி செலவு காரணமாக, பல சர்வதேச நிறுவனங்கள், சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க விரும்புகின்றன. ஏற்கனவே பல நாடுகள் இதற்கான பணிகளில் இறங்கியுள்ளன.
மேலும், ஆடை வர்த்தகத்தில் வலுவான நாடாக பார்க்கப்பட்ட வங்கதேசத்தில் தற்போது அரசியல் சூழல் சரியாக இல்லை என்பதால், நிறுவனங்கள் மாற்று வழியை யோசித்து வருகின்றன. சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெளியேற விரும்புவோருக்கான மாற்றாக இந்தியா உள்ளது.
மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தகம் மேற்கொண்டுள்ளதால், தற்போது ஜவுளித்துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் ஜவுளித்துறையில் எழுச்சி ஏற்படுமென நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.