பிட்காயினின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 99289 டாலரை எட்டியது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே ஏற்றம் கண்டு வரும் பிட்காயின், இன்று புதிய உச்சம் கண்டுள்ளது. ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியல் கிரிப்டோ வர்த்தக தளமான பக்த்-ஐ வாங்கவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகபட்சமாக 99289 டாலரை எட்டிய பிட்காயினின் மதிப்பு, இன்றைய வர்த்தக நேர முடிவில் 97,594.85 அமெரிக்க டாலராக இருந்தது. பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. கிரிப்டோகரன்சி வணிகத்துக்கு ட்ரம்ப் அரசு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கிரிப்டோகரன்சி சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது
கடந்த இரண்டு வாரங்களில் 40% மேல் பிட்காயினின் மதிப்பு உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பிட்காயினின் மதிப்பு வெறும் 5,000 அமெரிக்க டாலராக இருந்தது.