சர்வதேச அளவில் கட்டுமானம் செய்யப்படும் கப்பல்களில், 10 சதவீதம் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயர்மட்ட குழு, வரும் 28-ம் தேதி தென் கொரியாவின் சியோல் நகருக்கு செல்லவுள்ளது. உலகின் கப்பல் கட்டுமானத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாகும். ஐந்தில் ஒரு பங்கு கப்பல்கள் தென்கொரியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்த குழு ஆலோசனை நடத்துவுள்ளதாக கூறப்படுகிறது. தென்கொரியாவை விட இந்தியாவில் தயாரிப்பு செலவுகள் குறைவு என்பதால், பிற நாடுகளை இந்தியாவை நோக்கி வரவழைக்க முடியும் என நம்பப்படுகிறது. விசாகப்பட்டினம், பாரதீப், குஜராத் போன்ற இடங்களில் இதற்கான கட்டுமானங்கள் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படைக்கு விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்கும்போது சரக்கு கப்பல்களை தயாரிப்பது கடினமாக இருக்காது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் கூறியுள்ளார்.