சென்னையிலிருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கிற்கு கப்பல் வழித்தடத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
இந்தியா – ரஷ்யா இடையேயான கப்பல் போக்குவரத்து தற்போது செங்கடல் வழியே நடைபெறுகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் ரஷ்யாவை சென்றடைய 48 நாட்கள் ஆகின்றன. பயண நேரம், செலவு ஆகியவை அதிகமாக உள்ளதோடு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த வழித்தடத்தில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால், மாற்று வழித்தடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சென்னை – விளாடிவோஸ்டாக் வழித்தடம்
தற்போது சென்னை – விளாடிவோஸ்டாக் கப்பல் வழித்தடத்தை இந்தியா தொடங்கியுள்ளது. மேலும், கிழக்கு துறைமுகங்களான ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் பாரதீப்பையும் இந்த வழித்தடத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுளளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். இந்த வழித்தடத்தை பயன்படுத்துவதால் பயண நேரம் சராசரி வேகத்தில் 10-12 நாட்களாகவும், குறைந்த வேகத்தில் 12-14 நாட்களாகவும் குறைகிறது.
ரஷ்யாவில் இருந்து தற்போது பெட்ரோல் மற்றும் திரவ எரிவாயு ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜவுளி பொருட்கள், பாகங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மங்கோலியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்ய இந்த வழியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்தியா ஆராய்ந்து வருகிறது.
இந்திய ஏற்றுமதியில் 50 சதவீதமும், இறக்குமதியில் 30 சதவீதமும் செங்கடல் வழித்தடத்தில் நடைபெறுகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய உள்நாட்டு நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடல் வழியைப் பயன்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, 13 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC), இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (IMEEC) போன்ற பிற வழிகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார்.