சீன எஃகு இறக்குமதிக்கு தற்காலிக வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக JSW குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.
பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய JSW குழும தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சீன எஃகு இந்தியாவிற்குள் வருவதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சீன எஃகு நாட்டில் அதிக அளவில் இறக்குமதி செய்வதை தடுக்க, தற்காலிக வரி விதிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சீன எஃகு இறக்குமதியால் இந்திய எஃகு ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல்-அக்டோபர் இடைப்பட்ட மாதங்களில் நாட்டின் எஃகு இறக்குமதியானது, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 மில்லியன் மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது.
தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும், அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரனும் இதே கவலையை முன்வைத்துள்ளார். சீன எஃகு இறக்குமதி தொழில்துறையின் முதலீட்டுத் திட்டங்களை பாதிக்கலாம் என்று கூறினார்.