அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தங்களது நாட்டின் பிரையன்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் தற்போது வரை மறுக்கவில்லை.
இந்த தாக்குதலால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தங்கள் வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கியுள்ளார். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் ரஷ்யாவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொண்டால், பதிலுக்கு தாங்களும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஐந்தினை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒன்று சேதமடைந்துவிட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை பயன்படுத்தினால் அது ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான போராக மாறும் என்று புதின் எச்சரித்திருந்தார். உக்ரைன் ராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஐந்தினை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒன்று சேதமடைந்துவிட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.