இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை மத்திய அரசு இரண்டாவது முறையாக நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில் 1960-க்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.
சக்தி காந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் வரும் டிசம்பர் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதற்கு முன்னதாக, 1949-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை பெனகல் ராமா ராவ் சுமார் ஏழரை ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்தார். இம்முறையும் சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டால், பெனகல் ராமா ராவை விட அதிக காலம் பதவி வகித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.
சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் புதிய ஆளுநர் பதவிக்கு இதுவரை வேறொருவரின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பதோடு, இது தொடர்பாக எந்த தேர்வுக் குழுவும் அமைக்கப்படவில்லை. மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.