உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அமெரிக்காவின் அடுத்த அதிபராக ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார். உலக பொருளாதாரம் அமெரிக்க பொருளாரத்தை மையப்படுத்தி இயங்குவதில் மாற்று கருத்தில்லை.
தற்போது, ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பதே முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த ஆட்சியை போன்றே ட்ரம்ப் இந்த முறையும் பல்வேறு அதிரடியான மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்பதே ட் ரம்ப்பின் பிரதான முழக்கம். பொருளாதாரத்தில் அவர் கொண்டு வரவுள்ள மாற்றங்களும் இதனை மையப்படுத்தியே இருக்கும் என்பதே முதலீட்டாளர்களின் கருத்து.
மற்றொரு பக்கம், ட் ரப்பின் நிர்வாகம் அமெரிக்கர்களுக்கு சாதகமாக இருந்தாலும், பிறநாட்டவர்களுக்கு பாதகங்கள் இருக்கும் எனவும் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
இனி வரும் காலங்களில் அமெரிக்காவின் நிதிப்பற்றாக்குறையும், கடனும் கணிசமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஈடு செய்ய அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி குறைப்பு செய்ய தாமதாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது இந்தியா போன்ற நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல், ட்ரம்ப் கார்ப்பரேட் வரியை 21%-ல் இருந்து 15% ஆக குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்பை அதிகப்படுத்த வாய்ப்புண்டு. இதுவும் பிற நாடுகளில் கணிசமாக எதிரொலிக்கும்.
சரி இதெல்லாம் போகட்டும். இந்தியர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும்?. இறக்குமதிக்கான வரிகள் அதிகரிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால், ஃபார்மா உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடும். தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்தவர்களுக்கு விசா விதிமுறைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படக்கூடிய வாய்ப்பும் உண்டு. மற்றொரு புறம் சீன பொருட்கள் மீது ட் ரம்ப் அதிக வரி விதிக்கக்கூடும் என்பதால், அதன் பலன் இந்தியாவுக்கே கிடைக்கக்கூடும்