2025-ம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறித்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும், இந்திய ரிசர்வ் வங்கியும் வெளியிட்டுள்ள கணிப்புகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அண்மையில் வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி, 2025-ம் நிதியாண்டின் GDP 6.3% ஆக இருக்கும் என கணித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட குறைவாகும். நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், GDP 6.6% ஆக இருக்குமென கணிக்கப்பட்டது. முன்னதாக, GDP மதிப்பு 7.2% ஆக இருக்குமென கூறிய ரிசர்வ் வங்கி தனது சொந்த கணக்கீட்டை குறைத்துள்ளது.
2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சியானது 5.4% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 7 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாகும். பொருளாதார முன்னேற்றங்களைக் கண்காணிப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எஸ்பிஐ அறிக்கை வலியுறுத்தியிள்ளது. குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ) மாற்றமில்லை என ரிசர்வ வங்கி அறிவித்தது.
இவை குறுகிய கால நிவாரணம் அளித்தாலும், பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க நிரந்தர தீர்வை எட்ட வேண்டியது முக்கியம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.