சுங்க வரி ரத்து மற்றும் ஜிஎஸ்டி குறைப்பினால் மருந்து உற்பத்தியாளர்கள் 3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ரசாயனம், உரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல், மத்திய அரசு Trastuzumab Deruxtecan, Osimertinib, and Durvalumab ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளதாகவும், கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதாலும், சுங்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாலும், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்க விலையை குறைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்புக்கு இணங்க, உற்பத்தியாளர்கள் இந்த மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை குறைத்து தகவல்களை தாக்கல் செய்ததாகவும், அனுப்பிரியா படேல் தெரிவித்தார்.
முன்னதாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நிதிச்சுமையைக் குறைக்க மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரிக்கு மத்திய பட்ஜெட்டில் அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த மூன்று புற்றுநோய் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. Trastuzumab Deruxtecan மார்பக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. Osimertinib நுரையீரல் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. Durvalumab நுரையீரல் புற்றுநோய் மற்றும் பித்தநீர் பாதை புற்றுநோய் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. சமீபத்திய லான்செட் ஆய்வின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 12 லட்சம் புதிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் 9.3 லட்சம் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது