சந்தையின் முதுகெலும்பாக கருதப்படும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு குறைந்துள்ளது.
கன்டார் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட India at Crossroads அறிக்கையின்படி, கொரோனாவுக்கு பிந்தைய நடவடிக்கைகளால் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரம் அழுத்தத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு, பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேக்கநிலை நகர்ப்புற நுகர்வு மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற நுகர்வு குறைந்துள்ளதாகவும், அறிக்கை கூறுகிறது.
2025-ம் ஆண்டில் இந்தியாவின் சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைக்கும் முக்கிய சமூக-பொருளாதார மற்றும் நுகர்வோர் போக்குகளை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த அறிக்கையின்படி, டிசம்பர் 2022-ல் 38% ஆக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2024 ஜூலையில் 43% ஆகவும், இணைய வர்த்தக டெலிவரி 14%-லிருந்து 23% ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் நுகர்வை அதிகரிக்க நிறுவனங்கள் தங்களது திட்டங்களை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் கன்டார் நிறுவன ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.