ஊழியர்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தவும், பணி நேரம் சரியாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் பேசிய சசி தரூர், நீண்ட நேரம் வேலை செய்வது ஊழியர்களை மனச்சோர்வு, பதற்றம், மனநலப் பிரச்சினைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்குள் தள்ளியுள்ளது என்று கூறினார். வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவும், அவை பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் சசி தரூர் வலியுறுத்தினார்.
வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தேவை என்றும் கூறினார். எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தை சேர்ந்த பட்டயக் கணக்காளரான அன்னா செபாஸ்டியன் பேராயில் பணிச்சுமை காரணமாக அண்மையில் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி சசி தரூர் பேசினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் இளைஞர்களின் நலனை பாதுகாப்பதில் நாம் தோல்வி அடைந்துள்ளதாவும் அவர் கூறினார். இந்திய ஊழியர்களில் 78 சதவீதம் பேர் உடல் மற்றும் உணர்வு ரீதியிலான சோர்வு காரணமாக வேலையில் விரக்தியை அனுபவிப்பதாகவும் சசி தரூர் ஒரு ஆய்வை மேற்கோள் காட்டினார்.