ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக அமைச்சர்கள் குழு ஜவுளி உட்பட 150 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விகிதத்தை மறுசீரமைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக அமைச்சர்கள் குழு நேற்று கூடி ஆலோசித்தது. ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிதாக்குவதற்காக பல்வேறு வரி விகித மாற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை, ஜெய்சால்மரில் வரும் 21-ம் தேதி நடைபெறும் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஜவுளி, மிதிவண்டிகள் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களுக்கான வரி விகிதத்தை குறைக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளதாக நம்பப்படுகிறது.ரூ.1,500 வரையிலான ஜவுளி பொருட்களுக்கு 5% வரியும், ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையுள்ள பொருட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.10,000-க்கு மேல் உள்ள ஜவுளிகளுக்கான வரியை 28 சதவீதமாக உயர்த்தி, ஆடம்பரப் பொருட்களுடன் அவற்றை சீரமைக்க இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜவுளித்துறையை பொறுத்த வரையில் மூலப்பொருட்களை அதிக வரியும், இறுதி தயாரிப்பு பொருளுக்கு குறைந்த வரியும் விதிக்கப்படுவதால் உற்பத்தியாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதேபோல், ரூ.25,000க்கு மேல் விலையுள்ள கைக்கடிகாரங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கவும், ரூ.15,000க்கு மேல் விலையுள்ள ஷூக்களுக்கான வரியை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும் இக்குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.