அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.283 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெச் 1பி விசாக்களுக்குப் பதிலாக பி-1 விசா வழங்கியதாக எழுந்த புகாரில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியா உள்பட 22 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் குடியுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அமெரிக்காவில் பணியமர்த்திய தனது ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் ஹெச் 1பி விசாக்களுக்குப் பதிலாக பி-1 பார்வையாளர் விசாக்களை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 283 கோடி (34 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையின் ஒரு பகுதியாக ரூ. 238 கோடியை செலுத்த இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அமெரிக்காவில் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுவே ஆகும்.