இந்திய கப்பல் துறையை நவீனமயமாக்கும் மற்றும் சீரமைக்கும் நோக்கில் மத்திய அரசு மக்களவையில் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா பெரிய துறைமுகங்களில் போக்குவரத்தை அதிகரிக்கவும், குறிப்பாக உள்நாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வழிவகுக்கும்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை கடந்த அக்டோபர் மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்திய கப்பல்கள் சர்வதேச அளவுகோல்களை சந்திக்க உதவுவதோடு, சர்வதேச கடல் வர்த்தகத்தில் இந்திய நிறுவனங்கள் அதிக போட்டித்தன்மையுடன் இருக்க உதவும் நோக்கத்துடன் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், தகவல் பகிர்வுக்கு உதவ கப்பல் போக்குவரத்துக்கான தேசிய தரவுத்தளத்தை உருவாக்கவும் இந்த மசோதா முயல்கிறது.
சுமார் 7,500 கிலோமீட்டர் நீளமுள்ள பரந்த கடற்கரை மற்றும் முக்கியமான சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகாமையில் இருப்பதால் இந்தியாவில் கடலோரக் கப்பல் போக்குவரத்து பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், காலத்திற்கு ஏற்ப அதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் சார்பானந்த சோனோவால் மசோதாவை அறிமுகப்படுத்தும் போது கூறினார்.